மண்டல துருவ தவம்

ஆரா யோகா மையம் இணைய வழியாக வழங்கும் 48 நாட்கள் கொண்ட மண்டல துருவ தவம்.  இத்தவம் ஆரா யோகா மையத்தின் மற்றும் ஒரு பரிமாணமான துருவம் நல் வாழ்வு அறக்கட்டளை வழியாக வழங்கப்படுகிறது. 48 நாட்களுக்கு ஒரு நாளில் மூன்று வேளை அதாவது,

காலை 5 மணிக்கு    –  உயிர் வழி துருவ தவம்

மதியம் 12 மணிக்கு   –  முழுமையான துருவ தவம்

இரவு 7 மணிக்கு        –  பொதுமன துருவ தவம்

என்று ஒவ்வொரு நாளும் காலை, மதியம், இரவு என்று இணைய வழியாக வழங்கப்படும். 

ஏன் இவ்வாறு வழங்கப்படுகிறது என்றால்,

இறையின் படைப்பில் மூலத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் அணுக்கள் இணைந்து ஆகாயமாக, காற்றாக, வெப்பமாக, குளிர்ச்சியாக, மற்றும் நிலமாக, உருவாகி அவற்றிலிருந்து உயிரினங்கள் தோன்றி எண்ணிலடங்கா உயிரினங்கள் இறைவன் அருளால் இன்றும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. 

இப்படி உருவாகிக்கொண்டே இருக்கின்ற உயிரின கூட்டத்தில் மனித இனமும் ஒன்று. 

முதலில் மூலத்திலிருந்து தோன்றிய அணுவும் நாம் தான். இப்போது மனிதனாக இருப்பதும் நாம்தான் என்று விளங்குகிறது.

முதலில் தோன்றிய அணுவில் இருந்து ஆகாயமாக, காற்றாக, வெப்பமாக, நீராக, நிலமாக அவைகளில் இருந்து தோன்றிய எண்ணிலடங்கா உயிரினங்களாக சிந்தனையில் மேம்பட்டு மேம்பட்டு, இன்று மனித பிறவியாக மேன்மை பெற்றிருக்கிறோம்.
நாம் எல்லாமுமாக இருந்திருக்கிறோம், இருக்கிறோம்.

இப்படி எல்லாமுமாக இருந்து வந்தது எது? மாற்றம் அடைந்தது எது? என்று எண்ணிப் பார்த்தால்,

விதவிதமான உடல் தோற்றங்கள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. 

மாற்றம் அடையாமல் அனைத்து உடல்களிலும் உள்ளிருந்து இயக்குவது உயிர் ஒன்றுதான் என்று புரிகிறது. 

ஓரறிவிலிருந்து இன்று ஆறறிவு வரை நாம் பிறந்து, கடந்து, சிந்தனையில் மேம்பட்டு, இன்று மானிடப்பிறவியாக மேன்மை பெற்று இருக்கிறோம். ஏன் இதன் பிறகு மேம்பட்ட பிறவியாக ஒன்று தோன்றவே இல்லை ?

ஏனென்றால், சிந்தனை மேம்பாடு என்பது அளப்பரிய ஒன்றாக மானிட பிறவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மனம் என்ற புலன் முழுமையாக வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த மனம் என்ற புலன் எவ்வளவு விரிவானது என்றால், 

ஆகாயம் என்ற ஒன்றை, நமக்கு வழங்கப்பட்ட நான்காவது புலனாகிய கண்களால் பார்க்க முடியாது, ஆனால் அது பார்க்கும்படி ஒரு தோற்றத்தில் இருக்கிறது. நாம் நிமிர்ந்து பார்த்தால் தெரிகிறதே வானமாக அந்த தோற்றத்தில் காட்டப்படுகிறது. அதன் எல்லையை வகுக்க முடியுமா?

அது கற்பனைக்கும் எட்டாதது, அது விரிவடைந்து கொண்டே இருக்கக்கூடியது. அதில் தான் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் கோள்களும் பால்வெளி மண்டலங்களும் உள்ளன. ஒரு நட்சத்திரம் நாம் வசிக்கும் இந்த புவிக்கோலத்தை விட பல ஆயிரம் மடங்கு பெரியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவைகள் நம் கண்களுக்குப் புள்ளிகளாக காட்டப்படுகிறது. இவை அனைத்தும் உள்ளடக்கிய இந்த ஆகாயம் எவ்வளவு விரிவடைந்து கொண்டே இருக்கின்றதோ அவ்வாறேதான் நம் மனமும்.

இவ்வளவு ஆற்றல் உள்ள மனம் எவ்வாறு இருக்க வேண்டும்?

விரிவடைய வேண்டும், உங்கள் மனம் எவ்வளவு விரிவடைகிறதோ அவ்வளவு சிந்தனை மேம்பாடு உங்களிடம் இருக்கும். சிந்தனை மேம்பாட்டால் நீங்கள் இறை நிலையை அடைவீர்கள். இவ்வளவு அளப்பரிய ஆற்றல் உள்ள மனதை கொண்ட மனித இனம் இன்று எப்படி வாழ்கின்றது? நீங்களும் எப்படி வாழ்கிறீர்கள்? இப்படி விரிவடைகின்ற மனதை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள்?
மிக மிக குறுகிய மனநிலையோடு நீங்கள் வாழும் வாழ்க்கையை நிறைவற்றதாக வாழ்ந்தால், உடலில் நோய், மனதில் அழுத்தம் ஏற்படத்தான் செய்யும்.
நம்முடன் உருவமாக வாழ்ந்தவர்கள் அருவமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே சித்தர்கள், ஞானிகள், இறையியலாளர்கள், மா மகரிஷிகள் அவர்களால் வழங்கப்பட்டவைகளைக் கொண்டுதானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமும் அவர்களைப் போன்று மனம் கொண்டுதான் படைக்கப்பட்டிருக்கிறோம். இறையின் அருள் நமக்கும் வழங்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
அப்படி இருந்தும் ஏன் மனதால் விரிவடைய மறுக்கிறோம்?
பற்று பற்றிக் கிடக்கிறோம். குறுகிய மனநிலையோடு வாழ்கிறோம். இப்படி வாழ்வதால் வாழும் வாழ்க்கையை நிறைவில்லாமல் வாழ்ந்து ஒளி நிலை அடையாமல் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.

இவ்வளவு அளப்பரிய ஆற்றல் கொண்ட மனதை உடைய மனிதப் பிறவியாகிய நாம் மனதை விரிவடையச் செய்தால், வானில் ஜொலிக்கும் விண்மீனாகவும் மேன்மை பெற முடியும். மனம் குறுகினால், கண்களுக்கே புலப்படாத நுண்ணுயிரியாகவும் பிறப்பெடுக்க முடியும். இரண்டு எல்லைகளையும் இறைவன் நம்மிடமே வழங்கியிருக்கிறான் முடிவு செய்து வாழ வேண்டியது நாம் தான்.

இதற்காக பெரும் முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டுமா?
ஏதுமில்லை…சிந்தனை மேன்மை அடைந்தால் போதும்.
மனதில் மேம்பட்ட சிந்தனைகள் எழ வேண்டும். அச்சிந்தனைகள் எழ நல்ல உணர்வுகளை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நம்முடன் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற மகரிஷிகளின் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெற வேண்டும். விண்ணாற்றலை நாம் பெற வேண்டும். அவ்வாறு நாம் நல்ல உணர்வுகளை பெறச் செய்யும் செயல்தான் இந்த துருவ தவம்.

துருவ தவம் செய்து நல்ல உணர்வுகளைப் பெற்று, இப்புவியில் வாழும் மக்கள் அனைவரும், நீங்களும் மகரிஷிகளைப் போன்று இல்லற வாழ்க்கையில் இன்புற்று வாழ்ந்து, பிறவியில்லா பெருநிலை அடைந்து வானில் நட்சத்திரங்களாக ஜொலித்து, உங்களுடைய உணர்வுகளை இப்புவி முழுவதும் படரச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

அவ்விருப்பத்தால் 48 நாட்களுக்கு அதாவது ஒரு மண்டலத்திற்கு தினமும் மூன்று வேளை துருவ தவம் இணைய வழியாக வழங்கப்படுகிறது. ஒரு செயலை நாம் தொடர்ந்து எண்ணினால், செய்தால் நாம் அதுவாகவே ஆகிறோம். எனவே, இதில் இணைந்து பங்கு பெற்று உங்கள் உணர்வுகளை மேன்மைப்படுத்திக் கொண்டு, நீங்களும் மேன்மை அடைந்து சக மனிதர்களையும் ஜீவராசிகளையும் அரவணைத்து வாழ்வீர்களாக!
உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரொளி என்றும் நிறைவதாக!!

03.03.2025 அன்று முதல் தினமும் காலை 5 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7:00 மணிக்கு இணைய வழியாக துருவ தவம் நடைபெறும்.

இத்தவத்தை நானும் என்னோடு இணைந்து ஆரா யோகா மையத்தின் பொறுப்பாளர்களும் உங்களுக்கு வழிநடத்துவார்கள்,

வாரந்தோறும் வியாழக்கிழமை தவத்தின் முடிவில் உரையாடல்களும், 
அதாவது – ஆத்ம சுத்தி, மனிதர்களின் இன்றைய உணர்வு நிலை, உணர்வுகளின் நிலை, மகரிஷிகளின் உணர்வலைகளை நாம் பெரும் விதம், மனித மனதை பற்றிய விரிவான உரையாடல்களும் நடைபெறும். 

துருவ தவம் பற்றிய விளக்கம்:

https://aarayoganrc.com/dhuruva-thavam/

இணைவதற்கான இணைப்பு:

Meeting ID   :  9384087393

Password     :   DHURUVAM

இவ்விணைப்பை நீங்கள் எப்போதும் பயன்படுத்தலாம். மேலும் இவ் இணைப்பை உங்கள் உறவுகள் மற்றும் நட்புகளுக்கும் பகிருங்கள்.

குறிப்பு:

பெண்கள் மாதவிடாய் காலத்திலும் துருவ தவத்தை செய்யலாம்.

வீட்டில் யாராவது நோயுற்றிருந்தால், அந்த வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து அவர் மேம்பட வேண்டும் என்று குடும்பமாக இணைந்து செய்யலாம்.
குறிப்பாக கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மூன்று வேளைகளிலும் செய்யும் போது அவர்கள் வயிற்றில் வளரும் சிசு அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுஅவர்கள் அருள் ஞானக் குழந்தைகளாக பிறப்பார்கள்.

தொழிலில் நலிவடைந்தவர்கள் தவத்தை செய்ய செய்ய நலிவடைந்ததின் காரணத்தை புரிந்து கொண்டு சரி செய்து மேன்மை அடைவார்கள்.

இத்தவத்தை விரும்பி செய்ய வேண்டும்.