சற்று மரணத்தை அனுபவிப்போம்……!
இதைப் படிக்கும், ஆணோ பெண்ணோ, நீங்கள் ஒரு 90 நாட்கள் அதாவது மூன்று மாதங்கள், எழுந்திருக்க கூட முடியாமல்,
உடல்நிலை சீர்கெட்டு உங்கள் வீட்டில் படுத்த படுக்கையாக இருப்பது போல், கண்களை மூடி சில நிமிடங்கள் உங்களை நீங்கள் கற்பனை செய்து கொண்டு பாருங்கள்.
படுக்கையில் கிடக்கிறேன் சில மாதங்களாக, தந்தை என்பதாலும், கணவர் என்பதாலும், மனைவி என்பதாலும், தாய் என்பதாலும்,
மகள் என்பதாலும், ஏதோ ஒரு உறவு முறை என்பதாலும், என்னை கவனித்துக் கொள்கிறார்கள்,
இப்போது சில நாட்களாய், கவனிப்பில் சற்று தோய்வு, கவனிப்பவர்களின் முகத்தில் ஒரு சலிப்பு, வெறுப்பு, ஒன்றுமே செய்ய முடியாமல் எல்லாவற்றிற்கும் மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலை, சலிப்பும், வெறுப்பையும், புரிந்து கொள்ள முடிகிறது, இன்னும் உடல்நிலை தேராமல் நாட்கள் நீண்டு கொண்டே போனால் என்ன செய்வது ?
மூத்திரப்பையை கையில் பிடித்துக் கொண்டு பிறர் உதவியோடு கழிவறைக்கு கூட்டிச் செல்லும் நிலை, அவர்கள் முகத்தில், செயலில், வெளிப்படும் சலிப்பு, அதையும் புரிந்து கொள்ள முடிகிறது,
உயிரை மாய்த்துக் கொள்ளலாமா என்று தோன்றுகிறது, அதற்குக் கூட மற்றவரின் துணை தேவைப்படும் நிலையில் இருக்கிறேனே, ஐயோ ….
நான், நான், நான்தான், நான் சொல்வதுதான், என்னால் தான், நான் நினைத்தால், நான் யார் தெரியுமா?
என்னுடைய சொத்து என்ன தெரியுமா, என்னுடைய கௌரவம் என்ன தெரியுமா?
என்று இருமாப்பில், அகந்தையில், பெருமையில், ஆளுமைப்படுத்தி அதிகாரம் செலுத்தி இருந்த நான், இன்று……
மனைவி முக்கியம், கணவர் முக்கியம், பிள்ளைகள் முக்கியம், தாய் முக்கியம், தந்தை முக்கியம், உறவுகள் முக்கியம், என்று சொன்ன வாய்கள் எல்லாம், இப்படி படுத்த படுக்கையாக கிடப்பதற்கு, போய் சேர்ந்தால் பரவாயில்லை, என்று நினைக்கத் துவங்கி விட்டார்களோ என்று எனக்குத் தோன்றுகிறதே…
உடலை மதித்து கொஞ்சம் உடற்பயிற்சி செய்து இருக்கலாமோ, வாழ்வியல் ஒழுங்குகளில் வாழ்ந்திருக்கலாமோ, நல்ல உணவு முறைகளை கையாண்டு இருக்கலாமோ, நண்பர்கள், தோழிகள் அழைத்த போதெல்லாம் அவர்களுடன் பேசி மகிழ்ந்திருக்கலாமோ,
பள்ளி நாட்களில் காதலித்த, காதலனும் காதலியும், நானும் வேறு வேறு திருமணம் முடித்து அவர்களின் பிள்ளைகளின் திருமணத்திற்கு அழைத்த போது வேலை இருக்கிறது என்று தவிர்த்தேனே, சென்று அவனை, அவளை பார்த்து அந்த கண்களை சந்தித்திருக்கலாமோ,
குடும்பத்தோடு சுற்றுலா செல்லலாம் என்று நட்புகள் அழைக்கும் போது கூட அதை குடும்பத்தில் சொல்லாமல் செலவாகுமே என்று தவிர்த்தேனே, படுக்கையில் இப்போது இதையெல்லாம் நினைக்கிறேன்,
அறிவின் செருகில், பெருமையில் இருமாப்பில்,வாழாமல் மனதின் வழி வாழ்ந்திருக்க வேண்டும். வாழவில்லையே….
இப்பொழுது எனக்குள் ஆழமான ஒரு கேள்வி….!
உடல் நலிவடைந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக படுத்த படுக்கையில் கிடக்கிறேன்,
என் உடலுக்குள் இயங்கும் இந்த உயிர் தன்னை விடுபடுத்திக் கொள்ளாமல் ஏன் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது ? இன்னும் உணவை ஏன் என் உடல் கேட்கிறது ? இதெல்லாம் எதற்காக இப்பொழுதும் நீடித்துக்கொண்டிருக்கிறது ?
பதிலும் என்னிடமிருந்தே எனக்கு உணர்த்தப்படுகிறது இந்த உயிர் இயங்குவதற்கு இன்னும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம்,
நான் இருமாப்பில், பெருமையில், பொறாமையில், இச்சையில், பிறரின் உரிமையை பறிப்பதில், பிறர் உரிமையில் தலையிட்டதில்
வாழ்ந்த என்னுடைய நாட்களை, நான் மீண்டும் அசைபோட்டு அதிலிருந்து எல்லாம் நான் என்னிடமே மன்னிப்பு கேட்டு என் மனதின் வழியாக தெளிந்தால் என் உடலில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர், ஒரு தாவரத்தில் இருந்து பூ உதிர்வது போல் உதிர்த்துக் கொள்ளும்.
எந்த வலியும் இல்லாமல் என்னை இறைவன் அழைத்துக் அறவனைத்துக் கொள்வான்,
அதற்காகத்தான் என் உடல் குன்றிய நிலையிலும் உயிர் உள்ளிருந்து இயங்குகிறது, உணவை உடல் கேட்கிறது.
இதிலிருந்து நான் விளங்கிக் கொள்வது என்னவென்றால், படைத்தவர் கடைசி நிமிடம் வரை நான் என்னை உணர்வதற்கு வாய்ப்பு அளிக்கிறார்,
இதல்லவோ அன்பு….!!
இந்த அன்பு தான் இந்த பேரண்டம் முழுவதும் நிரம்பி இருப்பதை நான் இப்பொழுது உணர்கிறேன்.
அன்பே சிவம்!!
இறையியளாலன் – வேதா.