துருவ தவம்

துருவ தவம்

துருவ தவத்தை வழங்கிய ஞானகுரு வேணுகோபால சுவாமிகள்

ஞானகுரு வேணுகோபால சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து வளர்ந்து, பழனியம்பதியில் பஞ்சாலையில் வேலை பார்த்துக்கொண்டு, உபதொழிலாக சைக்கிள் கடையும், விறகு கடையும் வைத்து தொழில் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஞானகுருவின் துணைவியார் நோய்வாய்ப்பட்டு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமும் கைவிடப்பட்ட நிலையில், பழனியம்பதியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்ற மகானின் அருளால், துணைவியாரின் உடல்நிலை குணமடைந்து இச்சூழ்நிலையில், ஞானகுரு, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் பால் ஈர்க்கப்பட்டு, அவரை குருவாக ஏற்றுக்கொண்டு அவர் உபதேசத்தின் வாயிலாக உயிரியல், உலகியல், வானவியல், தாவரவியல் மற்றும் அறிவியல் சம்பந்தமாக பல பேருண்மைகளை அறிந்துணர்ந்து, குருதேவர் உணர்த்திய அருள் நெறியில் சுமார் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டு அருள் உபதேசம் செய்து துருவ தவம் எனும் தவத்தையும் வழங்கி, உடலோடு இருந்த போதும் உடலை உதிர்ந்த பின்பும் இன்றுவரை நல்வழிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் அன்னையும், தந்தையும்தான் முன்னறி தெய்வம் என்றும், அவர்களை வணங்கி, அவர்கள் அருளாசியால்தான் அனைத்து நலன்களைப் பெறமுடியும் என்றும் அறிவுறுத்தி,

மனிதர்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டியது எது? அதற்கான வழிமுறைகள் என்ன?

மனிதர்கள் தம்மை சூழும் தீமைகளில் இருந்து எவ்வாறு காத்துக்கொள்வது?

அருள்ஞானிகள், அருள் மகரிஷிகள் உணர்த்திய அருள் ஞான உணர்வுகளை நம் உயிர் வழியாக எவ்வாறு பெறுவது என்பதையும் வழங்கியும் அருள் வழங்கிக் கொண்டும் இருக்கிறார்.

அகத்திய மாமகரிஷி

பரிணாம வளர்ச்சியில் நாம் மிருக நிலையினை அடுத்து மனிதராக உருப்பெற்று இருக்கின்றோம்.

இதனை நாம் உணரும் வண்ணம் மனித உடலில் யானையின் தலையைப் பொருத்தி, விநாயகனாக உருவாக்கிய நாம் யார்?

எப்படி மனித நிலை பெற்றோம் என்பதைத் தான்உணர்ந்து உணர்த்தியவர் அகத்திய மாமகரிஷி.

அகத்தியர் தன் தாயின் வயிற்றில் சிசுவாக இருந்த பொழுது பெற்ற பூர்வ புண்ணியத்தால் அவர் தம்முள் விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலைக் கருவிலேயே பெற்றார். அவர் குழந்தையாக பூவுலகில் பிறந்த பின் திறந்தவெளியில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில், சூரியனை உற்றுப்பார்த்து, அதனிலிருந்து வெளிப்படும் விஷத்தை நுகர்கின்றார். அச்சமயம் அலைகள் அவருக்குள் அடங்குகின்றன. அகத்தியர் தமது குழந்தைப் பருவத்தில் கண்ணால் பார்த்து நுகர்ந்த உணர்வுகள், இவருக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஒளிக்கதிர்களாக மாறியது. மின்னல் எப்படி பல நிலைகளிலும் ஊடுருவி சென்று தங்குகின்றதோ இதேபோன்று அகத்தியருடைய நினைவாற்றலும் விண்ணிலும் பரவும் தன்மையினை பெற்றது.

ஆகவே, அகத்தியர் ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளை பார்க்கக்கூடிய ஆற்றலைப் பெற்றார். சிந்தனை மேம்பாட்டால் பரிணாம வளர்ச்சியில் வந்ததுதான் மனித உடல். பரிமாண வளர்ச்சியில் ஒத்த நாம் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெற்றவர்கள்.

தம்மையும், அண்டத்தையும், உலகத்தையும், உணர்வின் தன்மை கொண்டு அறிந்த முதல் மனிதர் அகத்திய மாமகரிஷி. அகத்தியர் திருமணமாகி இருமனமும் ஒன்றாக இணைந்து, இரு உயிரும் ஒன்றி, ஒளி என்ற உணர்வைப் பெற்று எதைக் கூர்மையாக கவனித்தாரோ, அதை எல்லையாக வைத்து, அந்த எல்லையை அடைந்து, இந்த பிரபஞ்சத்தில் உருவாகும் உணர்வுகள் அனைத்தையும் தம்முள் ஒளியாக மாற்றி, துருவ நட்சத்திரமாகத் திகழ்கின்றார்.

துருவ தவம் விளக்கம்

பூமியின் துருவத்தின் வழியாக வரும்…. துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை கவர்ந்து செய்வது துருவதவம்.
அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து அறிந்ததனால், துருவ நட்சத்திரமானான்.

இன்று நம் பூமிக்கு வரும் உணர்வலைகள் அனைத்தையும் அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒளிச்சுடராக மாற்றி, ஒளியின் சுடராக உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.

துருவ நட்சத்திரம் தன் இனப்பெருக்கத்தை ஒளிச் சுடராக மாற்றி இன்றும் நமது பூமியில் வளர செய்கின்றது. அந்த துருவப் பகுதியில் இருந்து வரும் அந்த உணர்வுகளை நாம் கவரும் நிலைதான் துருவதவம். அவர்கள் இருவரும் நஞ்சினை வென்று இந்த உடலிலேயே ஒளியாக மாற்றும் உணர்வுகள் பெற்றவர்கள்.

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது எத்தனையோ விஷமான உணர்வுகளை நாம் நுகர நேர்கின்றது. அதனால் விஷ அணுக்கள் நம் உடலுக்குள் வளர்ந்து உருவாகின்றது. உருவான அந்த விஷமான அணுக்கள் நம் உடலுக்குள் வளர்ந்து தனது இனத்தை பெருக்குகின்றது.

உருவான அந்த விஷமான அணுக்கள் நம் உடலை நலிவிடச் செய்து நோய்வுரச் செய்கின்றது. இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் தப்ப அந்த துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் உணர்வுகளை நாம் நுகர்தல் வேண்டும்.

வராகன் எப்படி தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்று மனிதனாக உருவாகியதோ அதைப்போல மனிதனான பின் தீமையை வென்றிடும் அந்த உணர்வின் எண்ணம் கொண்டு நாம் அந்த தீமையை வென்றிட்ட அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகர வேண்டும்.

துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற்றுவிட்டால் நமக்குள் அதை உருவாக்கி நம் உடலிலேயே வளர்த்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு நாம் செல்லும்போது இந்த புவியின் பிடிப்பை அகற்றிவிட்டு விண் செல்ல முடியும்.

அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஏழாவது நிலைகள் கொண்ட சப்தரிஷி மண்டலத்துடன் சென்று நாம் ஐக்கியமாக முடியும்.

இன்று சூரியனின் காந்த சக்தி துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் உணர்வலைகளைக் கவர்ந்து துருவப் பகுதியின் வழியாக நம் பூமிக்குள் பரவச் செய்து கொண்டிருக்கின்றது.

துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான பின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியன் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் அந்த அதிகாலை நேரத்தில், அந்த அருமையான உணர்வை உங்களுக்குள் பெருக்கிக் கொள்வதே துருவ தம்.

எனது குருநாதர் துருவ தவத்தை தியானிக்கும்படி எனக்குள் எப்படி உணர்த்தி உருவாக்கினாரோ அதேபோன்று உங்களுக்கும் இது உருவாக்கப்பட்டு அந்தச் சக்திகளை நீங்களும் பெறவேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பத்தில் இந்த துருவ தவத்தை உங்களுக்கு பகிர்கிறேன்.

இதை நீங்கள் விருப்பத்தோடு, நீங்கள் விரும்பும் போதெல்லாம் செய்து நல்ல உணர்வு எடுத்து உங்கள் வாழ்வில் என்றும் நலமும் வளமும் பெற வேண்டும்.

அகத்திய மாமகரிஷியின் அருள் சக்தியும், துருவ மகரிஷியின் அருள் சக்தியும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் உங்கள் அனைவருக்குள்ளும் என்றும் நிறைவதாக!

நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!