நாம் இயங்குகிறோமா? இயக்கப்படுகிறோமா?
என்ற கேள்வியை உங்களுக்குள் மிக மிக ஆழமாக கேட்டுப்பாருங்கள்……
நான் இயங்குகிறேன் என்று நீங்கள் நினைத்தால் ….
உங்கள் இதயத்தின் துடிப்பு உங்களால் இயக்கப்படவில்லை, இதயம் மட்டுமல்ல உங்கள் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும், ஏன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் உட்பட உங்களால் இயக்கப்படவில்லை…..
மயிரின் வளர்ச்சி உட்பட ….
இந்த இயக்கங்களை நிகழ்த்துவது எது ?
வானில் பறந்து போகும் பறவை கூட்டத்தில் முதலாவதாக வழிநடத்திச் செல்லும் அந்தப் பறவைக்கு இதுதான் போக்கு என்று அதை வழி நடத்துவது எது ?
நிலத்தில் வரிசையாக ஊர்ந்து செல்லும் எறும்பு கூட்டத்தில் முதலில் வழிநடத்தி செல்லும் எறும்புக்கு இதுதான் போக்கு என்று வழி நடத்துவது எது ?
இப்படி,
கடலில் வாழும் மீன் கூட்டத்தில் வழிநடத்திச் செல்லும் முதல் மீன்,
காட்டில் யானைக் கூட்டத்தில் முதலில் வழிநடத்திச் செல்லும் யானை,
மான் கூட்டத்தில் முதலில் வழிநடத்திச் செல்லும் மான்,
ஆட்டு மந்தையில் முதலில் வழி நடத்திச் செல்லும் ஆடு,
இவைகளுக்கெல்லாம் இதுதான் போக்கு என்று தீர்மானமாக வழிகாட்டுவது எது ?
அதேபோல்,
ஓர் ஊர் அதில் பல நூறு குடும்பங்கள் வாழ்கின்றன, வசிக்கின்றன. அத்தனை மனித கூட்டத்தில் ஒரு நபர் மட்டும் ஊர் தலைவராகிறார். அந்த ஊரே மேன்மை பெற வேண்டும், அங்குள்ள மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.
அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவைகளை அந்த குறிப்பிட்ட மனிதர் அரசாங்கத்திடமோ இல்லை தான் சுயமாகவோ பிற மனிதர்களுக்கு அமைத்து தருகிறார். இந்த மனிதருக்கு அந்த விருப்பம், இப்படி செயல்பட வேண்டும் என்ற போக்கு அவரின் சிந்தனையில் எழச்செய்வது எது ?
ஒரு குழந்தை கருவில் இருந்து முழுமை பெற்று பிரசவித்த பின், வெளி சுவாசம் எடுத்து சிறிது நேரத்தில் பசி என்ற உணர்வு ஏற்பட்டு வீறிட்டு அழுது, பின் தாயின் முளைக்காம்புகளை வாயில் வைத்தவுடன் நாக்கை மடித்து அதை உறிந்து குடிக்க வேண்டும் என்ற திறன் யார் வழங்கியது ?
இவ்வளவு நாட்கள் மறக் கிளையில் அமர்ந்து உறங்கிய பறவை இணை சேருவதற்கு முன்பே தன் கூடுகளை கட்ட துவங்குகிறது. என்ன நடக்கிறது என்பது அறியாமலே இந்த செயலை செய்யத் தூண்டுவது எது ?
காளைகள் மண் மேட்டில் தன் கொம்புகளை குத்தி சிலுப்புகிறது இந்த செயலை செய்ய தூண்டுவது எது ?
நாமோ,
வழிகாட்டும் உயிரினங்களோ, வழிகாட்டும் மனிதர்களோ, தாங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று ஏதாவது பயிற்சி செய்ததா, செய்தனரா? இல்லை முயற்சி செய்ததா, செய்தனரா ?
ஏதுமில்லை…
ஏதோ உள்ளுக்குள் விருப்பம் தோன்றியிருக்க வேண்டும். அந்த விருப்பத்தில் அவைகள், அவர்கள் நிலைபெற்றிருக்க வேண்டும்.
இந்த இயக்கங்கள் எல்லாம் ஒரு நுட்பமான சக்தி இயக்குகிறது.
நாமும் அந்த நுட்பமான சக்தியால் இயக்கப்படுகிறோம். இந்த நுட்பமான சக்தி அனைத்தையும் ஓர் சீர் நிலையில், ஒழுங்கில் வைத்திருக்கிறது.
அதனை உணருங்கள், அதை உள்வாங்குங்கள், அதனிடம் சரணாகதி அடையுங்கள்.
அது வேறு எங்கும் இல்லை. அதுவே எல்லாமுமாக இருக்கிறது.
அது உங்கள் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்…,
உங்கள் உடலும் அதுவே தான், எல்லா உடல்களும் அதுவே தான்,
எல்லாமும் அதுவே தான்.
அதை நீங்கள் கடவுள், இயற்கை, சிவம், சக்தி, இறைவன், அல்லா, பிரம்மா, பிதா, எனது தந்தை, எனது மாமன், மாமி, மச்சான், நண்பன், எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம். உறவு வைத்துக் கொள்ளலாம்..
அது உங்களின் உரிமை…
உரிமை இருக்கும் போது அங்கு மரியாதை எதற்கு ?
அது அதைத்தான் உங்களுக்குள் உணர்த்துகிறது. உரிமை கொள் என்கிறது.
ஆனால் நீங்களோ பூசாரிகள், பாதிரியார்கள், ஆன்மீகவாதிகள், மத குருமார்கள் என்று இடையில் ஏற்படுத்திக் கொண்டு அவர்களிடம் இறையை உணர வேண்டும் என்று பிச்சை எடுக்கிறீர்கள்.
இவர்கள் உங்களுக்குள் குற்ற உணர்ச்சிகளை விதைப்பதை தவிர வேறொன்றும் செய்வதில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம், இங்கு…
இங்கு மட்டுமல்ல
இந்த பேரண்டம் முழுவதுமே ஒரு நுட்பமான சக்தியால் இயக்கப்படுகிறது.
பிறகு ஏன் இந்த மனிதர்களிடம் மட்டும் பொறுமையின்மை..?
எதற்காக இவ்வளவு திட்டமிடுதல்?
எதற்காக இந்த பரபரப்பு? எதற்காக இவ்வளவு பதட்டம்? எதற்காக இவ்வளவு பயம்? எதற்காக இவ்வளவு பொறுமையின்மை, வருத்தம், போட்டி, பொறாமை, இறுமாப்பு, பெருமை ?
பொறுமையாக இருங்களேன்…
காத்திருங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள் உணருங்கள்.
உங்கள் புலன்களுக்கு புலப்படாத ஆற்றல் ஒன்று உங்களை அரவணைத்துக் காக்கிறது.
இன்பமாக நிறைவாக வாழுங்கள்.
நீங்கள் விரும்புங்கள் வழங்கப்படும் வரை விரும்புங்கள், உங்களுக்கு அருளப்படும். உங்களுக்கு வழங்கப்பட்ட அருளை, கொண்டாடி களிப்புடன் இருங்கள்.
இன்னும் ஆழத்திற்குள் சென்று விரும்ப வேண்டும். இன்னும் இன்னும் ஆழத்திற்குள் சென்று விருப்பத்தில் நீங்கள் நிலைபெற்றால், இறைவனுடைய அகத்திற்குள் சென்று விடுவீர்கள். அதன்பிறகு உங்களுக்கு விருப்பங்கள் என்ற ஒன்றே இருக்காது.
உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை இறைவனே அருளி விடுவான் இவ்வளவு எளிமையானது வாழ்க்கை.
பிறருக்காக நீங்கள் வேண்டும்போது, உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டியதில்லை, உங்களை இறைவனே பார்த்துக் கொள்வான்.
எவர் ஒருவர் தனக்குரிய கோரிக்கைகளை விட பிறருடைய கோரிக்கைகளுக்காக ஆழ்ந்து விரும்புகிறாரோ அவரை மனிதர்கள் கைவிடுகிறார்கள். இறைவன் கை தூக்குகிறான்.
மகிழ்ச்சியும் தைரியமும் தான் வாழ்க்கை.
🙏நலம் பெறுவோம் வளம் பெறுவோம்🙏
இறையியலாளன் – வேதா