அகந்தையின் வெளிப்பாடுகள்

Uyir Vazi logo

பெருமை, பொறாமை, இச்சை, இருமாப்பு

இவைகள் தீக்குணங்கள் இக்குணங்கள் உயிரின வகைகளில் மனிதர்களுக்கு மட்டுமே இவை உண்டு.

பெருமை:

இந்நிலையில் உள்ளவர்கள்,

பிற மனிதர்களை இழிவாக நினைப்பார்கள் தன் கணவர், மனைவி, பிள்ளைகளை கூட இழிவாக நினைப்பார்கள், பிறரிடம் தான் சிறப்பாக வாழ்வதாக காட்டிக் கொள்வார்கள், இவர்களிடம் பாசாங்குகளும், நடிப்பும் சந்தேகமும் நிறைந்திருக்கும். இவர்களால் தனிமையில் அமைதியாக இருக்கவே முடியாது. இவர்களால் அடுத்தவர்களிடம் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருக்க முடியும்.

பொறாமை:

இந்நிலையில் உள்ளவர்கள்,

தன்மேல் மதிப்பிழந்து இருப்பார்கள், தாழ்வு மனப்பான்மை மிகுந்திருக்கும். இவர்கள் நெஞ்சுப் பகுதியில் எப்பொழுதும் ஒரு அழுத்தம் இருக்கும், அடிக்கடி பெருமூச்சு விடுவார்கள் இவர்கள் தன் பாசத்தை அடுத்தவர்களிடமும் தன் மனைவி, கணவர் பிள்ளைகளிடமும் நான் மிகுந்த பாசத்துடன் இருக்கிறேன் என்பதை நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.

இவர்களால் தனிமையில் அமைதியாக இருக்க இயலாது. இவர்கள் அடுத்தவர்களிடம் அதிகமாக பேசமாட்டார்கள் தன்னூல் மிக அதிகமாக உரையாடிக் கொண்டே இருப்பார்கள்.

இச்சை:

இந்நிலையில் உள்ளவர்கள்,

இவர்களிடம் மிகுந்த நடிப்பும், மற்றவர்களை மிகுந்து புகழ்ந்து பேசக்கூடிய தன்மையும் இருக்கும்.

இவர்கள் பெரும்பாலும் பெருமை குணம் உள்ளவர்களிடம் அடிமைகளாக இருப்பார்கள் தான் அடிமையாக நடிக்கிறோம் என்பது இவர்களுக்கு தெரியும்.

மத குருமார்களை சுற்றியும், அரசியல்வாதிகளை சுற்றியும், நடிகர்களின் ரசிகர் மன்ற தலைவர்களாகவும் இவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.

இவர்கள் தனிமையில் இருப்பார்கள் தனிமையில் மனதிற்குள் நடிப்பு பயிற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

இவர்களால் மனதில் அமைதித்தன்மையில் இருக்கவே முடியாது.

ஒரு நிலையில் மனதில் அமைதி தன்மை ஏற்பட்டு தன் நிலையை உணர்ந்து திருத்திக் கொள்ளும் போது இவர்களைப் போன்று புரிந்து கொள்ளும் தன்மையில் வேறு யாரும் இருக்கவே முடியாது.

சகிப்புத்தன்மை – அதாவது அடிமைத்தனம்

இந்நிலையில் உள்ளவர்கள்,

தான் அடிமையாக இருக்கிறோம் என்பதே இவர்களுக்கு தெரியாது. இவர்களும் பெருமை குணம் கொண்டவர்களிடம், தான் அவர்களிடம் நன் மதிப்பில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அடிமைகளாக இருப்பார்கள்.

அடிமையாக இருக்கிறோம் என்பதே புரியாத நிலையில் இருப்பார்கள்.

இவர்களைத்தான்…

தங்களை பெரும் முதலாளிகலாக நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் தங்களின் அருகிலேயே இவர்களை வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் இவர்களோ தான் முதலாளிக்கு மிக முக்கியமானவன் நான் இல்லை என்றால் இங்கு ஒன்றுமே நடக்காது என்று கருதி அடிமைகளாக இருப்பார்கள்.

இவர்கள் தன் நிலையை உணர்ந்து திருத்துக்கொள்ள மாட்டார்கள்.

இவர்களை மற்றவர்களாலும் மாற்ற முடியாது. இவர்களுக்கு மனதில் அதிக கவலையும் மிகுந்த அச்சமும் இருக்கும்.

இறுமாப்பு:

இந்நிலையில் உள்ளவர்கள்,

இவர்களைத்தான் அனாதைகள் என்று சொல்லலாம்.

இவர்கள் பிறரின் கருத்துக்களையோ, வழி காட்டுதல்களையோ அறவே ஏற்க மறுப்பார்கள்.

தன் மனைவி, கணவர், பிள்ளைகள், கூறும் கருத்துக்களை கூட இவர்களின் மனதிற்குள் ஏற்க மறுப்பார்கள்.

இவர்கள் தன் குடும்பத்தின் மீது மிகுந்த பாசத்துடன் இருப்பதாக பிறரிடம் கூறிக் கொள்வார்கள், ஆனால் குடும்பத்தில் அப்படி இருக்க மாட்டார்கள்.

இவர்களிடம் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசவும், தங்கள் கருத்துக்களை சொல்லவும் தயங்குவார்கள்.

இவர்களை நீங்கள் அதிகமாக கோயில் வாசல்களில், சாலைகளில், முதியோர் இல்லங்களில் காணலாம்.

அந் நிலையிலும் அவர்கள் இறுமாப்போடே இருப்பார்கள்.

இவர்கள் தனிமையில் அல்ல தனித்து விடப்பட்டவர்கள்.

எவ்வாறு வாழ வேண்டும் ?

தன் மனைவி, கணவர், பிள்ளைகளாக இருந்தாலும் அவர்கள் பிறர் தான்.

பிறர் உரிமையை பறிக்காமல்,

பிறர் உரிமையில் தலையிடாமல்,

தன் உரிமையை விட்டுக் கொடுக்காமல்,

கீழ்ப்படிதல் இல்லாமல் திமிரோடு வாழ வேண்டும்.

இது எனது விருப்பம்.

இங்கு நான் சொல்லும் திமிர் என்பது தலைக்கனம் அல்ல.

இவ்வாறு எழுதிய என்னை முதல் நிலையில் உள்ள பெருமை என்ற நிலையில் உள்ளவர்கள் இவன் என்ன பெரிய இவனா என்று என்னை கருதுவார்கள்.

அவர்கள்தான் பிற மனிதர்களை இழிவாக நினைப்பவர்கள் ஆயிற்றே,

அதனால் என்ன…

நான் உண்மையை கூறுகிறேன். உண்மையை மட்டுமே கூறுகின்றேன்.

எனக்கு தயக்கம் இல்லை ஏனென்றால் நான் உங்கள் உறவு. இதில் உங்களை நீங்கள் சீர்தூக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.

🙏நலம் பெறுவோம் வளம் பெறுவோம்🙏

ஞான குரு உணர்த்திய உணர்வுகளை உணர்ந்து பதிவு செய்தேன்.

இறையியளாலன் – வேதா